கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தினர், மே.7ஆம் தேதி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் ரெம்டெசிவர் மருந்து 6 குப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த ஆய்வாளர் வாகனத்தில் வந்த ஆனந்த் பாலாஜி என்பவரை கைது செய்தார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்த 24 வயதான ஹோமியோபதி மருத்துவர் மகேந்தர் என்பவரிடமிருந்து, ஒரு குப்பி தலா ரூ.10 ஆயிரம் என கொடுத்து வாங்கி, ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் ஆனந்த் பாலாஜியை கைது செய்த நிலையில், டாக்டர் மகேந்தரை தேடி வந்தனர். இந்தநிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மகேந்தர் மனு தாக்கல் செய்தார்.