தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், சிறப்பாசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் போராட்டக் களமாகவே காட்சியளிக்கின்றன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், அதற்காக குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
இது போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர், கடந்த நான்கு ஆண்டுகளாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, 2019 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடந்த வாரம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது போடப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அரசுக்கு எதிராக தொடரும் ஊழியர்களின் போராட்டம்! இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடக்கிறது எனக்கூறும் முதலமைச்சர் பழனிசாமி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாமல், சங்கங்கள் கோரிக்கை வைத்ததால் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதாக கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனக் கூறுகின்றனர். இந்நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தங்களை அழைத்துப்பேச வலியுறுத்தி, சென்னையில் இன்று 72 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மாலை நேரப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட முயன்ற ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது! இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 7 ஆவது நாளாக சிறை நிரப்பும் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள் 1,600 க்கும் மேற்பட்டோர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 12 ஆவது நாளாகவும், அரசுப்பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்க்கைக் கல்வி ஆகியவற்றை கற்பிக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 12,483 பேர், காத்திருப்புப் போராட்டத்தில் ஐந்தாவது நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பகுதிநேர ஆசிரியர்கள்! பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு அனைத்து நாட்களும் பணி வழங்க வலியுறுத்தி முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும், அதனை முதலமைச்சர் ஏற்க மறுத்ததால் அவர்களும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்! இதனிடையே, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தெரிவித்துள்ளது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரமென்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் அரசுக்கு எதிராக திரும்பினால் அது அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசு கருதுகிறது. கோரிக்கைகளை அரசு தானாக நிறைவேற்றுமா அல்லது அரசு ஊழியர்கள் அரசை நிறைவேற்ற வைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அரசுக்கு எதிராக தொடரும் ஊழியர்களின் போராட்டம்! இதையும் படிங்க:’ரத்து செய்யப்பட்ட எம்.டெக் மாணவர் சேர்க்கை மீண்டும் நடத்தப்படும்’