சென்னை:சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதியிலும் ஆரோவில் அறக்கட்டளை, சுற்றுச்சூழல் தாக்க அறிவிப்பின்கீழ் எந்தவித அனுமதியும் பெறாமல், பன்னாட்டு நகரம் என்ற பெயரில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக வனப்பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளது. இதனால் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும், பன்னாட்டு நகரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மரங்களை வெட்ட ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று (ஏப்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரோவில் அறக்கட்டளை வசம் உள்ள 778 ஹெக்டேர் பரப்பில் பன்னாட்டு நகரம் அமைப்பதற்கு முறையான திட்டத்தை தயாரித்து, 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும், அதுவரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.