சென்னை: மலர் மருத்துவமனையில் பிச்சுமணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 11ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனிடையே தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கோவையைச் சேர்ந்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் போலியாக மருத்துவத் தகுதி சான்று கொடுத்து, அவருடைய மருமகன் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பதிவு செய்ததாக உயிரிழந்த பிச்சுமணியின் மகள் ஸ்ரீசுபிதா தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரில் விசாரணைக்கு சாட்சி சொல்வதற்காக, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருந்த பிச்சுமணியை அழைத்து, அவரின் மருத்துவர் பதிவை ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக நீக்கிய மருத்துவக் கவுன்சில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.
மருத்துவர் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது
இந்த உத்தரவை எதிர்த்து பிச்சுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஆர். மகாதேவன் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். அப்போது பிச்சுமணிக்கு எதிராக மருத்துவக் கவுன்சிலில் புகார் அளிக்கப்படவில்லை என்றும், சாட்சியமளிக்க மட்டுமே சென்ற நிலையில், தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவருக்கு விளக்கம் அளிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் மருத்துவர் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பளித்துள்ளார்.