சென்னை: மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவர்களின் விவரங்களை தேசிய உதவித் தொகை பக்கத்தில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தனியாக இணையதள முகவரி மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில மாநிலங்களில் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்ட இணைய முகவரி மற்றும் பாஸ்வேர்டை தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன் மூலம் தனியார் மையங்கள் ஒரே வங்கிக் கணக்கு எண்களை கொடுத்து மாணவர்களை அதிக அளவில் மத்திய அரசின் உதவித்தொகை பக்கத்தில் சேர்த்து உள்ளதாக தெரியவந்துள்ளது.