காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதல் - வழக்காட தடை - தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்
சென்னை: கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்காட தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன். இவரது வீட்டருகே பத்மநாபன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கோட்டூபுரம் நாயுடு தெரு நான்காவது சந்து பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன் வந்தபோது, சாலைகள் அமைத்தால் தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் எனக்கூறி பத்மநாபன், தாமஸ் சீனிவாசனுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 17ஆம் தேதி இரு தரப்பினரும் வீட்டின் அருகிலேயே சாலை அமைப்பது தொடர்பாக மோதிக்கொண்டனர்.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க இரு தரப்பினரும் சில வழக்கறிஞர்களுடன் வந்துள்ளனர்.
அப்போது கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குள் வந்த இரு தரப்பு வழக்கறிஞர்களும் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியானது.
இதனையடுத்து, சாலை அமைப்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாகவும் காவல் நிலையத்தில் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக மூன்று வழக்குகளை கோட்டூர்புரம் காவல்துறை பதிவு செய்தது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சட்டவிதிகளை மீறி மோதிக் கொண்ட சைதாப்பேட்டை வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏங்கல்ஸ், பாலமுருகன், மணிகண்டன், பத்மநாபன், ஹரிஹரன், நெப்போலியன், ராஜேஷ்வரன் ஆகிய 7 பேரும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணி செய்வதற்கு தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.