சென்னை:மண்ணடியில் உள்ள அங்கப்பன்நாயக்கன்தெருவில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. சமீபத்தில் இந்த அமைப்பின் தலைவராக ஹைதர் அலி தேர்வு செய்யப்பட்டார்.
பேனர் கிழிப்பு... அலுவலகம் சூறை..
இதனையடுத்து புதிய நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய பேனரைக் கட்சி அலுவலகம் முன்பு தமுமுக நிர்வாகிகள் வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அடித்து நொறுக்கியதுடன் கட்சி அலுவலகத்தையும் சூறையாடினர்.
இதனால் அங்கு குழுமியிருந்த இருதரப்பினருக்கும் இடையே கடும்மோதல் ஏற்பட்டது. இதில் மமக தொண்டர்கள் தாக்கியதில், தமுமுக தொண்டர்கள் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமுமுக, மமக தொண்டர்களிடையே மோதல் கட்டுக்குள் வந்த கலவரம்... காவலர்கள் குவிப்பு..
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்து கலவரத்தைக் கட்டுபடுத்தினர். இந்த மோதலை அடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர் இது குறித்துப் பேசிய தமுமுக நிர்வாகிகள், "மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா உத்தரவின்பேரிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதற்கு காவல் துறையினர் துணையாக இருந்தனர்" எனக் குற்றஞ்சாட்டினார்.
ஜவாஹிருல்லா மீது சரமாரிப்புகார்
மேலும் தமுமுக அமைப்புக்கு ஜனநாயகப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமுமுக-வை கைப்பற்றி, தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே ஜவாஹிருல்லா, இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தமுமுக தரப்பினர், மமக தலைவர் உட்பட அதன் நிர்வாகிகள் மீது, புகார் அளித்துள்ளனர். இதே போல் மமகவினர் தமுமுக நிர்வாகிகள் மீது புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு, உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும்; தமுமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'இனியும் சும்மா இருக்க மாட்டேன்' - சசிகலாவின் நியூ ஆடியோ