சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.08.2022அன்று சென்னை கலைவாணர் அரங்கில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற திட்டத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, இளைஞர்கள், போதைப்பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் எனவும்; போதைப் பொருட்கள் ஒழிப்பதற்கு உதவுவதாகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருட்கள் விற்பனை-கைது நடவடிக்கை:இதனைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன், பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள், LSD ஸ்டாம்ப், போதைக்காக பயன்படுத்தப்படும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் ஆகியவற்றை கடத்துபவர்களையும், அவற்றை பதுக்கி விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேற்படி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் முதல் கூடுதல் ஆணையர் வரையிலான காவல் அலுவலர்களுடன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இன்று (ஆக.22) கலந்தாய்வு மேற்கொண்டார்.
எல்லைகளில் தீவிர சோதனை: இக்கலந்தாய்வில் போதைப்பொருட்களை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் "போதைப்பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) என்ற சிறப்பு தணிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதற்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்புக் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கவும்; வெளி மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக சென்னை பெருநகரின் எல்லைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டன.
குண்டர் சட்டம் பாயும்:அத்துடன் குறிப்பாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் காவல் குழுவினர் மூலம் தீவிரமாகக் கண்காணித்து, இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கவும்; அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கவும், குற்றவாளிகளின் சொத்து விவரங்களை சேகரித்து முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.