சென்னை:திமுக ஆட்சி புதிதாகப் பொறுப்பேற்ற பின், இதுவரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள், பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநாடு நடத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு - திமுக ஆட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு மார்ச் 10ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வரை நடைபெறவுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10ஆம் தேதி, முதல் 3 நாட்கள் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன் பின், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அலுவலர்களுடன் ஒரு நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அலுவலர்களிடம் முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். அதேபோல் மாநாட்டின் முடிவில், சில திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட உள்ளார். அத்தோடு, சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் கெளரவிக்கப்படுவர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு ?