தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

69% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவே உத்தரவிட்டதாகக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

69% இட ஒதுக்கீடு விவகாரம்
69% இட ஒதுக்கீடு விவகாரம்

By

Published : Aug 3, 2021, 1:50 PM IST

சென்னை:மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2020 ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான அரசின் கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை என திமுக தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டதாகவும், மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 விழுக்காட்டிற்குள் வருகிறதா, இல்லையா எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளிக்க மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details