அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. மேலும், 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் நடந்துவருகிறது. அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி களமிறங்கி இருக்கிறார்.
செந்தில் பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் - admk
சென்னை: அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தோட்டக்குறிச்சி வாக்குச்சாவடியை செந்தில் பாலாஜி பார்வையிட வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரை வரவேற்க திமுக தொண்டர்கள் வாக்குச்சாவடியில் 300 மீட்டர் தொலைவில் காத்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து போகும்படி கூறியதாகவும், அப்போது திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதாகவும், வாகனங்களில் ஆட்களை கொண்டுவந்து வாக்களிக்கவைக்க ஏற்பாடு செய்வதாகவும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.