சென்னை:சேலம் மாவட்டத்தில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு நான்கு மாதங்களில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரை கைது செய்த மல்லியக்கரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஏட்டு சத்தியமூர்த்தி ஆகியோருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பணி ஓய்வு பெற இருந்த 2017 ஜூன் 30ஆம் தேதி தன்னை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏட்டு சத்தியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “கைதி முருகனின் இறப்பு இயற்கைக்கு முரணானது அல்ல என ஆத்தூர் நீதித்துறை நடுவர், சேலம் காவல் உதவி ஆணையர், மருத்துவர்களின் அறிக்கை அளித்துள்ளதால், தனக்கு எதிரான பணி நீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.டி. அருணன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நீதித்துறை நடுவரின் அறிக்கையை ஏற்று, நடவடிக்கையை கைவிடுவதாக முடிவுக்கு வந்தால், மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும் எனவும், துறைரீதியான நடவடிக்கையை தொடர்வதாக இருந்தால் ஆறு மாதங்களில் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் குற்ற வழக்கில் மனுதாரர் தண்டிக்கப்பட்டால், ஓய்வூதியம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கலாம்" எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:நெதர்லாந்து, கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்