அண்மையில் நடைபெற்ற திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஊடக கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), வழக்கறிஞர் அருள்மொழி (திக), மல்லை சத்யா (மதிமுக), கனகராஜ் (சிபிஎம்), சி.மகேந்திரன் (சிபிஐ) உள்ளிட்டோர் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதியை இன்று(ஆகஸ்ட் 3) சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ’தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நியாயத்தை, உண்மையை எழுதும் ஊடகவியலாளர்கள் அதிகளவில் தாக்கப்படுகின்றனர். சமூக ஊடகங்கள் வாயிலாக மிரட்டப்படுகின்றனர். ஊடகங்களின் நிர்வாகத்தில் தலையிடக் கூடிய அளவில் அவர்களின் பொய் பரப்பும் ஆளுமை இருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடைபெறும் ஆபாச தாக்குதல்கள் குறித்து காவல் துறையில் புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், அரசுகளின் ஆதரவு பெற்றோர் புகார் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.