சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக சி.வி.சண்முகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகத்தின் தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம் என பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என தெரிவித்தார்.
மேலும், இதேபோல 2021ஆம் ஆண்டு சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்த போது, போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.