தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எஸ்ஐ அத்துமீறியதாக புகார்: எஸ்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு - உதவிஆய்வாளர் மீதான புகார் - எஸ்பி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நிலம் விற்பனை தொடர்பான விவகாரத்தில் ஒரு குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டியதாக காவல் உதவி ஆய்வாளர் மீதான புகாரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Dec 2, 2021, 12:28 PM IST

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் தன் மகனுடன் சேர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அதில், "திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிராமத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசப் நாசியா ஆகியோர் வாங்க முன்வந்தனர். இதற்காக முன்தொகையும் தந்தனர். இதன் பின்னர் விலை அதிகமாக உள்ளதாகக் கூறி பணத்தைத் திருப்பிக் கேட்டனர்.

பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க எங்களால் முடியவில்லை. இதையடுத்து எங்கள் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரைப் பெற்ற உதவி ஆய்வாளர் எங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டார். மூன்று வாரங்களில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இது குறித்து திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முயற்சித்தோம். ஆனால், நவம்பர் 18ஆம் தேதி, உதவி ஆய்வாளர், நிலத்துக்கு முன்தொகை கொடுத்த மூவரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

உதவி ஆய்வாளர் என் கணவரையும், என்னையும் அடித்து வீட்டைவிட்டு விரட்டினார். தற்போது எங்கள் வீட்டை அவர்கள் சட்டவிரோதமாகக் கையகப்படுத்திக்கொண்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யவும், எங்கள் வீட்டை எங்களிடம் ஒப்படைக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் கடந்த மாதம் 27ஆம் தேதி அஞ்சல் மூலம் புகார் அனுப்பியும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது வீடும், வீட்டுக்குள் உள்ள விலை உயர்ந்த பொருள்களும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்திவிட்டனர்.

குறிப்பாக கூத்தாநல்லூர் உதவி ஆய்வாளருக்கு எதிராகக் குற்றச்சாட்டு உள்ளதால், இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த உத்தரவில், வீட்டுக்குள் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்கக் கூடாது என்பதை நினைவுப்படுத்துவதாகவும் தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க :School Leave: தொடர் மழை - பள்ளிகளுக்கு விடுமுறை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details