சென்னை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில், மதுரை தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கத்தின் தலைவர் செல்வகுமார் அளித்த புகார் மனுவில், "மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவை போற்றும் வகையிலும், அவரைப் பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் விதமாகவும், அவருடைய சிலையை மதுரையில் எந்தவித இடையூறும் இல்லாத இடத்தை தேர்வு செய்து, தங்களுடைய சொந்த செலவில் அரசு விதிகளுக்கு உட்பட்டு நிறுவ அனுமதி அளிக்க வேண்டி, கடந்த 2010ம் ஆண்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
அலுவலர்கள் இடத்தை பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்தபின், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்படி சிலையை நிறுவ அனுமதி வழங்கினர். சிலை நிறுவும் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதால் கடந்த 2011ஆம் ஆண்டு மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
முக்கிய துறைகள் பரிந்துரைத்தும், மாநகராட்சி தீர்மானத்தித்திற்கு பின்பும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், உள்துறை செயலாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய காலத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரை மீது உள்துறை செயலாளர் உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு, தமிழ்நாடு அரசு சிலை வைக்க அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டது. பல்வேறு துறைகளும், சென்னை உயர் நீதிமன்றமும் அனுமதித்துள்ள நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காவல்துறை அலைக்கழித்தது. தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்த எங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்திய காவல்துறை அலுவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - விளக்கும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்!