சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடையில் (ARC காமாட்சி ஜுவல்லர்ஸ்) மேலாளராக பணியாற்றி வருபவர், சிவகுமார். இவர் தன்னை நகைக்கடை திருட்டு வழக்கில் சேர்த்து நற்பெயரை கெடுப்போம் என மிரட்டி, 2 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களைச்சந்தித்த சிவகுமார் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர், கடந்த 10ஆம் தேதி காலை தங்கள் கடைக்கு நுங்கம்பாக்கம் காவல் துறையினர் எனக்கூறி வந்த இருவர், திருட்டு வழக்கில் நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுள் சில உங்கள் கடையில் வாங்கியது என்பதால் விசாரணைக்காக காவல் நிலையம் வரவேண்டும் எனக்கூறி தொலைப்பேசி எண்ணை பெற்றுச் சென்றனர்.
பின்னர் மாலை தொடர்புகொண்டு இரவு 8 மணிக்கு காவல் நிலையம் வரும்படி கூறியதாகவும், அவர் சொன்ன நேரத்திற்கு காவல் நிலையம் சென்றபோது உதவி ஆணையர் இருப்பதாகவும், அவர் சென்ற பிறகு அழைப்பதாகவும் கூறி காவல் நிலையம் அருகே ஒரு தெருவில் காத்திருக்கச்சொல்லிவிட்டு, பின் சுமார் 10.30 மணிக்கு உதவி ஆணையர் சென்றபிறகு காவல் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு ஆய்வாளர் அறைக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
லஞ்சத்திற்குப்போட்ட அடி: தங்களிடம் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர் எனக்கூறி செல்போனில் பேசிய நபர் சொன்னபடி, காவல் நிலையம் சென்றபோது அங்கிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோகிணி, தங்களால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நேபாள பெண்மணியிடம் உங்கள் கடை நகை உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் உங்கள் கடை பெயரை சேர்த்து கடைக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருக்க தங்களை கவனிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், தங்கள் கடைக்கு காவல் துறையினர் எனக்கூறி வந்த இரு நபர்களை சுட்டிக்காட்டி அவர்கள் சொல்லும்படி செய்தால் உங்களுக்கு பிரச்சனை வராது என நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி கூறியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.