சென்னை: மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்குவதற்கு முன் கொசு மற்றும் கொசு புழு உற்பத்தி அதிக அளவில் இருக்கும். குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையிலும் ஆற்றங்கரை ஓரத்தில் குடிசைப் பகுதிகளிலும் கொசு அதிக அளவில் உருவாகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கொசு மற்றும் கொசு புழுவை அழிப்பதற்காகவும், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கொசுக்களை ஒழிப்பதற்காக 3 ஆயிரத்து 463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புகைபரப்பும் பணிகள்
இந்தப் பணியாளர்களின் மூலம் 57 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைபரப்பும் இயந்திரங்கள், கையினால் கொண்டு செல்லும் 251 புகைபரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைபரப்பும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் குடிசைப்பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் ஆகியவற்றின் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ட்ரோன் இயந்திரம் மூலம் கொசு மருந்து
நீர் வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும்போது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களைக் கருத்தில்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து சோதனை முறையில் ட்ரோன் இயந்திரங்களைப் பயன்படுத்தி கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு கொசுக்கள் இருப்பதாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீண்டும் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நீர்வழிக் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.