தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்ட விரோதமாக குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - chennai

சட்ட விரோதமாக 4 மாதங்களாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 24, 2022, 12:28 PM IST

சென்னை: கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், அதற்கான காரணங்களை கூறவில்லை என்பதாலும் முத்துலட்சுமியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது கணவர் மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மகள் திவ்யாவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்து விட்டதாகவும், அதனடிப்படையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அரசும் மறுநாளே ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது தொடர்பான ஆவணங்களை உரிய காலத்தில் பெற நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜுலை மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட மறுநாள் தான் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை அறிவுரை கழகம் ஏற்க மறுத்தால் உடனடியாக குண்டர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே 128 நாட்கள் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்ட மகாலட்சுமி மற்றும் சத்யா ஆகியோருக்கு தலா 5 லட்ச ரூபாயை இழப்பீடாக 6 வாரங்களில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு...சாட்சியாளரை ஹேம்நாத் மிரட்டுவதாக புகார்

ABOUT THE AUTHOR

...view details