சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகப் பெய்தது. முதற்கட்டமாக அக்டோபர் 25ஆம் தேதிமுதல் நவம்பர் 4 வரை பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இரண்டாவது கட்டமாக நவம்பர் 7 முதல் நவம்பர் 11ஆம் தேதிவரை பெய்த மழையால் வட மாவட்டங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.
மூன்றாவது கட்டமாக நவம்பர் 17 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை மழை தொடர்ந்து நீடித்ததால் இதர மாவட்டங்களிலும் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. மொத்தமாக 711.60 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட 59 விழுக்காடு கூடுதலாகும்
அமைச்சர்கள் குழு ஆய்வு
கனமழையினைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழு நவம்பர் 12ஆம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேத நிலவரத்தை ஆய்வுசெய்து விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்தது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நவம்பர் 13ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்களையும், நவம்பர் 15ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் பயிர்ச்சேத பாதிப்பு குறித்து நேரில் ஆய்வுசெய்தார்.
இந்நிலையில், நவம்பர் 16ஆம் தேதியன்று பயிர்ச்சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. முதலமைச்சர் டிசம்பர் 16ஆம் தேதியன்று வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி உதவி வழங்க ஆணையிட்டார்.
நிவாரணத் தொகை விவரம்
அறுவடைக்குத் தயாராக இருந்த கார், குறுவை, சொர்ணவாரி பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்த இடங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கவும், சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6038 மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணூட்ட உரம், யூரியா, டிஏபி (DAP) அடங்கிய இடுபொருள்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்பா பருவத்தில் பாதிப்படைந்த இளம் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6038 என்ற வீதத்தில் நிதியாக அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.
சேத மதிப்பீடு