தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய திருடன்... வலைவீசி பிடித்த காவல் துறை! - கைப்பேசியை திருட பயிற்சி

சென்னை: கைப்பேசியை திருட பயிற்சி அளித்துவந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய கும்பல்

By

Published : Oct 3, 2019, 3:07 PM IST

ஒரு பெருநிறுவனம் என்றால் ஊழியர்களுக்கு வேலையில் சேரும்போது ஆறு மாத பயிற்சியும் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறையும் உழைப்பிற்கேற்ற ஊதியமும் கொடுப்பது விதி. பெருநிறுவனம் போல் கைப்பேசி திருடுபவர்களை வைத்து நிறுவனம், நடத்திய திருட்டுக் கும்பலை பூக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக சந்தேகப்படும்படியாக ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிந்த போது காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபரை விசாரணை செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

அப்போது அந்நபருக்குப் பின்னால் இரண்டு காவலர்கள் பின்தொடர்ந்துள்ளனர். சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தன் கையிலிருக்கும் கைப்பேசியை ஒருவரிடம் ஒப்படைக்கும்போது கையும் களவுமாக காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டைச் சோதனை செய்ததில் தெலுங்கு செய்தித்தாள் அதிக அளவு வீட்டில் கிடந்துள்ளது. பிடிபட்டவர்களை விசாரணை செய்தபோது ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் வாடகை எடுத்துத் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை செய்ததில் ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் சென்னை முழுவதும் கைப்பேசி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல் துறையினர் குறிவைத்து கைது செய்தனர்.

திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய கும்பல்

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெருநிறுவனம் போல் கைப்பேசி திருடுவதற்கென நிறுவனத்தை நடத்திச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. ஆந்திராவிலிருந்து வந்த இளைஞர்களை கைப்பேசி திருட்டு தொழிலில் சேர்த்து ஆறு மாதம் பயிற்சி அளிப்பார். குறிப்பாகக் கூட்ட நெரிசலில் தெலுங்கு செய்தித்தாள் படித்துக் கொண்டே கைப்பேசி திருடுதல், கைக்குட்டையைப் பயன்படுத்தி கைப்பேசியைத் திருடுதல், என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து திசை திருப்பி கைப்பேசிகளைத் திருடுவது போன்ற பயிற்சியை இந்தக் கும்பலுக்கு ரவி அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது திங்கள் முதல் வெள்ளி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் கைப்பேசிகளைக் கும்பல் கும்பலாகப் பிரித்துவிட்டு நெரிசல்களில் திருடுவார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் கைப்பேசி திருடுபவர்களுக்கு விடுமுறை அளித்து விடுவார். மேலும் திருடும் நபர்களுக்கு இத்தனை கைப்பேசிகளைத் திருட வேண்டும் எனவும் பெருநிறுவன நிறுவன டீம் லீடர் போல் இலக்கை நிர்ணயிப்பார்.

அதுமட்டுமல்லாது அதிக கைப்பேசி திருடும் திருடர்களுக்கு ஊக்க ஊதியமாக மூன்று கைப்பேசிகளைக் கொடுத்துவிடுவார். வேலை செய்வதற்கு முன்பாகவே சம்பளத்தைக் கொடுத்துத் திருடச் சொல்வது இந்த கைப்பேசி திருட்டு நிறுவனத்தின் கொள்கை என ரவி வாக்குமூலம் அளித்துள்ளார். குறைந்தபட்சம் வாரம் 50 கைப்பேசிகள் எனக் கடந்த இரண்டு வருடங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கைப்பேசிகளைத் திருடி இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்திய ரவி, நானி, ராகுல்ரவி, இயேசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராஜேஷ், ஆலா மகேஷ், பிண்டி வெங்கடேஷ், பிண்டி ராஜு ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் திருடிய கைப்பேசிகள் அனைத்தும் கும்பல் தலைவன் ரவி சேகரித்துவைத்து ஆந்திராவில் மாதந்தோறும் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 40 கைப்பேசிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி மற்ற கைப்பேசிகளை மீட்பதற்காகவும் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details