சென்னை துறைமுகத்தில் அண்மையில், கண்டெய்னர்களில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் சேவை, இயந்திரம் மூலமாக கப்பலில் சரக்குகளை ஏற்றுவதற்கான கட்டணம், கப்பலை துறைமுகத்தில் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சரக்குகளை ஏற்றி இறக்கும் சேவைக்கான கட்டணம் 36 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்திய துறைமுக தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவை சரி செய்யும் விதமாகவே சென்னை துறைமுகம் அதன் பயனாளிகளுக்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சி குறைவால் பாதிப்பை சந்தித்து வரும் துறைமுகத்திற்கு இந்த கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார் சென்னை துறைமுக ஸ்டீவ்டோர் (Stevedores) சங்கத் தலைவர் இஸ்வர் அசன்தா. இது தொடர்பாக பேசிய அவர், “சென்னை துறைமுகத்தில் 800 தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். சுமார் 25 நிறுவனங்கள் ஸ்டீவ்டோரிங் எனப்படும் இந்த ஏற்றி, இறக்கும் வேலையைச் செய்து வருகின்றன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து குறையும்போது, வேலையில்லாத போது, நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் கட்டண உயர்வு நியாயமானதுதான் என்றாலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள இந்த சூழலில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என கோரிக்கை வைக்கிறோம். இந்த புதிய கட்டணங்கள் நவம்பர் 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதற்குள் நான்கு நிறுவனங்கள் இந்தத் தொழிலை விட்டு வெளியேறிவிட்டன.