சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் மாணவச் செல்வங்களின், கல்வி இடைநிற்றலைக் கருத்தில் கொண்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மற்றும் பட்டயப் படிப்பு படித்து வரும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
மெய்நிகர் வகுப்பறை வசதி
அதன்படி, மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி, கரோனா நோய்த்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டது. அக்குழந்தைகளுக்கு, மெய்நிகர் வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசால் கல்வித்தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் நேரடி வகுப்புகளால் பயனடைவதில் மிகுந்த சிரமம் இருந்தது.
அக்குழந்தைகளின் பள்ளிக்கல்வி, பாதிப்படையாமல் இருக்கும் வகையில், பள்ளிக்கல்வி கற்கும் குழந்தைகள், தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சியைப் பார்த்து முழுவதும் பயனடையும் பொருட்டும், பள்ளிகள் திறந்தவுடன் மாலை நேரச்சிறப்பு வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.