மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக 20 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் குடியிருந்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சுவர் எழுப்பிய நில உரிமையாளர் குட்டி என்கிற சிவசுப்ரமணியத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நில உரிமையாளர் சிவசுப்ரமணியம் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது. எந்த உள்நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது நிலத்தில் சுவர் எழுப்பினார்... அது எப்படி தவறாகும்?
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சட்டவிரோதமாக சுவர் கட்டியதாக மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிவசுப்ரமணியம் 1998ஆம் ஆண்டு அந்த இடத்தை வாங்கும் போது அந்த சுவர் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது.
கடந்த 21 ஆண்டுகளாக மலை பகுதிக்கு ஏற்றவாறு கட்டப்பட்ட சுற்றுசுவர் பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்தது. மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு கட்டடங்கள் வரை சாய்வான முறையில் தான் கட்டப்பட்டுள்ளது.