தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றம் - வைகோ கடும் கண்டனம்

எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என மாற்றப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றம்
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றம்

By

Published : Feb 4, 2021, 5:58 PM IST

சென்னை: சமீபத்தில் வர்ணம் பூசப்பட்டகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகரத் தொடரி வெளியிடவில்லை. இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

யார் அந்த பாஷ்யம்:

தொடர்ந்து யார் அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா? அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன? எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மாநகரத் தொடரி விளக்கம் அளிக்க வேண்டும். இந்தப் பெயர் மாற்றம், தமிழ்நாடு அரசுக்குத் தெரியுமா? இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

பராமரிப்பவர்களுக்கு உரிமை கிடையாது:

நாடு விடுதலையடைந்து 72 ஆண்டுகளாக, வான் ஊர்தி, தொடரி நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்து வருகின்றன. இதுவரை எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது இல்லை. கேரளத்தில், திருவனந்தபுரம் வான்ஊர்தி நிலையத்தின் பராமரிப்புப் பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ எனப் பெயர் மாற்றம் செய்ததை, கேரள மாநில அரசு கடுமையாகக் கண்டித்திருக்கின்றது. உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தன் பெயரை எழுதினால், ஒப்புக் கொள்வீர்களா? அதுபோல, வான் ஊர்தி மற்றும் தொடரி நிலையங்களைப் பராமரிக்கின்ற நிறுவனங்கள், அவற்றைச் சொந்தம் கொண்டாட முடியாது.

சென்னைக்கும் அதானி பெயரா?

சென்னை வான்ஊர்தி நிலையத்தின் முன்பு இருந்த அண்ணா, காமராசர் பெயர்ப்பலகைகளை நீக்கினார்கள்; இன்றுவரை திரும்ப வைக்கவில்லை. ஒருவேளை, சென்னைக்கும் அதானி பெயரைச் சூட்டத் திட்டம் வைத்து இருக்கின்றார்களா? என்பதற்கு, மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சசிகலா வருகை திடீர் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details