அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலகக் கட்டடம் கட்ட, இந்திய நிறுவனமான எல் & டியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி, சென்னையில் 27 லட்சம் சதுர அடியில், கட்டடங்கள் கட்டத் தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி பெற, சிடிஎஸ் நிறுவனம் தனது இந்தியன் வங்கிக் கணக்கிலிருந்து 23 கோடி ரூபாயை, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல, புனேவில் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெற, அரசு அதிகாரிகளுக்கு 6 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.