சென்னை: கடற்கரைகளில் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் நீரில் மூழ்கி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையிலும், நீரில் முழ்கியவர்களை காப்பாற்றும் வகையிலும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, கடற்கரை உயிர்காக்கும் (Beach Life Guard)பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சி தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் (NFDB) 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் மூலம் தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் மீனவ இளைஞர்களுக்கு வழங்கப்படும். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 7) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சி மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறன்களை மேம்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பதற்கும் உறுதுணையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்பயிற்சி முடித்தவர்களை அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர கால முதலுதவி சிகிச்சை அளித்திடவும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், இப்பயிற்சி மூலம் தமிழகத்தை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்கரைப் பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் உதவிகரமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை