சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் பூ வியாபாரி உள்பட மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் நேற்று (ஏப்ரல் 27) பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தனிமனித இடைவெளியை பின்பற்றாத காரணத்தால், சந்தையை கோயம்பேடு, மாதவரம், கேளம்பாக்கம் என மூன்றாக பிரிப்பது எனப் பேசப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த வியாபாரிகள், ஆம்னி பேருந்து நிலையத்தில் இடம் மாற்றித்தரக் கோரினர். முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 3,500 கடைகளில் 600 மொத்த வியாபாரக் கடைகள் மட்டும் செயல்பட சி.எம்.டி.ஏ அனுமதி வழங்கியுள்ளது. சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி சரக்குகளை சந்தையில் இறக்க மாலை 6 மணியிலிருந்து, இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது.