சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம் அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு அமைத்தது தமிழ்நாடு அரசு. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்னேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் திறன்கள், இதன்மூலம் ஏற்படும் தீமைகள், நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது. ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.
மேலும் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைச் சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் தங்கள் ஆய்வை சில மாதங்களுக்கு நிறைவு செய்தனர்.
தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழு அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதனிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்தது.