சென்னை:பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 1) 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை டெல்லியில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய மு.க. ஸ்டாலின்,
“கரோனா என்னும் பெருந்தொற்றை வென்று அனைத்து மாநிலங்களும் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. தமிழ்நாடும் தொற்றிலிருந்து மீண்டுவருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய்மை இந்தியா திட்டம், அம்ருத் ஆகிய திட்டங்களின் இரண்டாம்கட்ட பணிகளை நான் வரவேற்கிறேன். நம் நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில் இதுபோன்ற திட்டங்கள் தேவையான ஒன்று. இந்தியாவில் அதிக நகரமயமாக மாறிய மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று.
ஒன்றிய அரசுக்கு பக்கபலமாக இருப்போம்
நகர்ப்புற மேம்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றைப் பெருமளவு மேம்படுத்தியுள்ளது. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்தும் புதுமையான திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.
2031ஆம் ஆண்டை நினைவில் வைத்து, தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். திறந்தவெளியில் கழிப்பிடம் இல்லாத சூழல், திடக்கழிவு மேலாண்மை, குப்பைக் கூளங்கள் அற்ற நகரம், பாதாள சாக்கடைத் திட்டம், கலைஞர் மேம்பாட்டுத் திட்டம், சிங்காரச் சென்னை இரண்டாம் கட்டம் எனப் பல்வேறு பணிகளைத் தமிழ்நாடு அரசு திறம்பட மேற்கொண்டுவருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போது நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ள திட்டங்களை எங்கள் மாநில அரசின் மேம்பாட்டுத் திட்டங்களுடன் இணைத்து மக்கள் வாழ நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்த ஒன்றிய அரசின் முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு உறுதுணையாக விளங்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:505 வாக்குறுதிகளில் 202-ஐ நிறைவேற்றிவிட்டோம்- மு.க. ஸ்டாலின்