தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்ததற்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், அரசின் மீது நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம்; மக்கள் அமைதி காக்க முதலமைச்சர்  வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம்; மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்

By

Published : Jul 17, 2022, 1:54 PM IST

Updated : Jul 17, 2022, 2:00 PM IST

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற தனியார் பள்ளி மாணவி, பள்ளி வளாகத்திற்குள் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைதியாக தொடர்ந்த போராட்டம் இன்று(ஜூலை 17) மிகவும் தீவிரமடைந்துள்ளது.

மாணவி பயின்ற தனியார் மெட்ரிக் பள்ளி வளாகம் முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. பள்ளியின் பேருந்துகள் உள்ளிட்டவற்றை அங்குள்ள போராட்டக்காரர்கள் டிராக்டர்களால் மோதி சேதப்படுத்தி நெருப்பு வைக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியின்போது, படுகாயமடைந்தனர்.

சின்னசேலம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்திற்குள் சந்தேகத்தேகமான முறையில் உயிரிழந்தது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் செய்த சாலை மறியல் போராட்டம் கலவரமாக மாறிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சர் ட்விட்டரில் வேண்டுகோள்:போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டரில் இச்சம்பவம் குறித்து, "கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம்

Last Updated : Jul 17, 2022, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details