சென்னை: மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஸ்டாலின், "2021-22ஆம் கல்வியாண்டில், மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7 ஆயிரத்து 876 பேர் சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர்.
அவர்களில் 6 ஆயிரத்து 100 பேருக்கு கல்விக் கட்டணமாக 38 கோடியே 31 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், இன்று (ஏப். 7) தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.