சென்னை:பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 1) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் விவாதம்
மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்காகப் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவை குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சரின் ஆலோசனை
அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பள்ளி வளாகத்தைப் பராமரிப்பது, பாதுகாப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வது, இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது, மாணவர்களின் கற்றல் அடைவில் கவனம் செலுத்தித் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தினை உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.