தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் அறிவுரை

சுற்றுச்சூழல், சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

முக ஸ்டாலின், ஸ்டாலின்
CM STALIN REVIEW MEETING WITH Geography and Mining dept

By

Published : Jul 24, 2021, 3:13 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், சூழலியல் போன்றவை பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை (Sustainable Mining Policy) உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அறிவுரையும் ஆலோசனையும்

செயற்கை மணல் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை ஒழங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும், கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், பொதுமக்கள், கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள்; திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

மின்னணு சேவை முறை

புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம், நடைச்சீட்டு வழங்கும்வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு கனிம நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயினை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை உருவாக்கும்படி அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம்,தொழில்துறை சிறப்பு செயலாளர் ரா.லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் இல.நிர்மல் ராஜ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கதிவரன், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.பிருந்தா தேவி, அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details