சென்னை:கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக, வரும் 15ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் இருப்பு, ஒமைக்ரான் தொற்று ஆகியவை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை
இந்தியா உள்பட பல நாடுகளில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள போதிலும், கடந்த சில நாள்களாக உலக நாடுகளை உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்திவருகிறது.
இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. பன்னாட்டு விமான நிலையத்திலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின் அந்த வகையில், மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஸ்டாலின் அறிவுரை
அதேபோல், கல்லூரிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், கரோனா பரிசோதனையை அதிகரிப்பது தொடர்பாகவும், வரும் நாள்களில் பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை உடனடியாகச் சேகரித்து பரிசோதிக்க வேண்டும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
அறிவிப்பு எப்போது?
தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்டங்களில், விரைவாகத் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மெரினா கடற்கரை, திரையரங்கம், பொழுதுபோக்குப் பூங்கா, பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Omicron in India: ராஜஸ்தானில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்