தமிழ்நாடு

tamil nadu

45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் 800 அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்கள் அடங்கிய 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப். 16) தொடங்கி வைத்தார்.

By

Published : Feb 17, 2022, 7:17 AM IST

Published : Feb 17, 2022, 7:17 AM IST

Updated : Feb 20, 2022, 1:10 PM IST

cm stalin inaugurates 45th book fair at chennai
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (பிப். 16) முதல் மார்ச் 6 வரை என 19 நாள்கள் 45வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

ஜனவரி மாதத்தில் நடைபெற வேண்டிய புத்தக கண்காட்சி நேற்று (பிப். 16) தொடங்கியுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக இருப்பதால் பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்றி கண்காட்சி நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரு லட்சத்திற்கு மேலான புத்தகங்கள்

புத்தக கண்காட்சியில், 800 அரங்குகளில் 500க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் ஒரு லட்சத்திற்கு மேலான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. தேர்தல் நாள் தவிர பிற நாள்களில் வாசகர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட கரோனா பாதுகாப்பு செயல்முறையே தற்போதும் பின்பற்றப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் 10 விழுக்காடு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அறுசுவை அரசு எனும் குறைந்த விலையிலான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சிக்கு வருவதற்காக https://bapasi.com/ என்ற இணையதளம் மூலம் புத்தக கண்காட்சிக்கான டிக்கெட் பெறலாம். அனைத்து நாள்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி மணிவரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் தமிழர் பண்பாடு தொடர்பான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான போட்டிகள்

கடந்தாண்டு மொத்தம் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்தாண்டு கூடுதலாக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டு சென்னை பகுதி கல்வி நிறுவனங்களில் பயிலும் 10 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி , திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு 6 முதல் 8, 9-10, 11-12 வகுப்புகளுக்கு என தனித்தனியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. பேச்சுப் போட்டியில் முதலிடம் பெறும் வெளிநாட்டு மாணவருக்கு 100 டாலர் வரை பரிசு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது.

புத்தக கண்காட்சியில், புத்தகம் வாங்கி வாசித்து அந்த புத்தகம் பற்றி இரண்டு நிமிடம் சிறப்பாக பேசும் மாணவர் ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பேச்சாளராக தேர்வாகும் மாணவருக்கு மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

மதுரையில் மாபெரும் நூலகம்

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”புத்தக கண்காட்சி ஜனவரி ஆறாம் தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது கரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. இதனால் புத்தக கண்காட்சியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் பபாசி அமைப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு வழக்கமாக அளிக்கும் 75 லட்சத்துடன் பபாசிக்கு கூடுதல் நிதியாக 50 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தாண்டு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரையில் 14 ஆண்டுகளும், கோவையில் நான்கு ஆண்டுகளாகவும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதே போன்று மற்ற மாவட்டங்களில் புத்தக காட்சி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். மதுரையில் 114 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திராவிட ஆட்சி சாதனை

இது போன்று அறிவு கோயில்கள் திறப்பது நம் அரசின் கடமை. தமிழ் மொழி அறிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு, எழுத்துத் தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் அனைத்து தேர்வு வாரியங்களின் தேர்வுகள் கட்டாயம் தமிழ் தகுதி பெற்றிருக்க வேண்டும். அன்னைத் தமிழ் மொழி கோயில்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நூல்களை இரண்டு பெரும் தொகுதிகளாக அரசு வெளியிட்டுள்ளது.

அண்ணா, கருணாநிதி ஆகியோரது வழியில், புத்தகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த வகையில், உயரிய எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் ஐந்து சென்ட் நிலத்தில் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும். இது தான் இந்த ஆட்சியின் சாதனை, திராவிட ஆட்சி சாதனை.

மேலும், என்னை பார்க்க வருபவர்கள் புத்தகத்தை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த பிறகு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் யாழ்பான நூலகம், பல நாடுகளில் உள்ள சிறிய நூலகங்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

நான் எழுதிய எனது வாழ்க்கை சுவடுகள் அடங்கிய ’உங்களின் ஒருவன்’ என்ற தலைப்பிலான புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியின் பொழுது புதிய அறிவிப்புகள் வெளியிடுவது கருணாநிதியின் வழக்கம்.

அந்த வகையில் நானும் புதிய அறிவிப்பினை வெளியிட தயாராக இருக்கிறேன். ஆனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய அறிவிப்பு வெளியிட முடியவில்லை. இதனால் தேர்தலுக்கு பிறகு நல்ல அறிவிப்பினை வெளியிடுவேன்” என அவர் தெரிவித்தார். மேலும், விருது பெறுபவர்களின் பட்டியல் பின்வருமாறு,

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள்

1.உரைநடை - பத்திரிகையாளர் சமஸ்

2.நாடகம் - பிரசன்னா ராமசாமி

3.கவிதை - கவிஞர் ஆசைதம்பி

4. புதினம் - வெண்ணிலா

5. பிறமொழி - பால் சக்கரியா

6. ஆங்கிலம் - மீனா கந்தசாமி

பபாசி விருதுகள் பெறுபவர்கள்

1.சிறந்த பதிப்பாளர் விருது - மீனாட்சி சோமசுந்தரம், ரவி தமிழ்வாணன்

2. சிறந்த புத்தக விற்பனையாளர் விருது - பொன்னழகு

3. சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது - திருவை பாபு

4. சிறந்த தமிழறிஞர் விருது - தேவிரா

5.சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் விருது - பாரதி பாஸ்கர்

6. சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான - கு.வை பாலசுப்ரமணியன்

Last Updated : Feb 20, 2022, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details