சென்னை: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்கும் இந்நிறுவனம், அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன வசதியுடன் கூடிய ஆறு ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Classes) மற்றும் குளிர்பதன வசதியுடன் கூடிய 15 விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.