தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40ஆவது ஆண்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி மாணவர்கள் நடனமாடி வரவேற்றனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'நாட்டிலேயே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்.
மாணவர்களின் முழுமையான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு நல்ல தரமான கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களாகவும் ஆகக்கூடிய வகையிலே, சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்கி, அவற்றை செயல்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளை குழந்தைப்பருவத்தின் முதற்கொண்டு கண்டறிந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை சமவாய்ப்பு என்னும் சமூக நீதியை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது’ என அவர் தெரிவித்தார்.