சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப். 18) நடைபெறுகிறது.
இந்நிலையில், 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது, "நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த மசோதா ஆளுநர் மாளிகை வளாகத்தில் 210 நாள்கள் தூங்கிக் கிடக்கிறது.
முதலமைச்சர் விளக்கம்:இதுவரை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு எதிரான இந்த செயலுக்கு எதிர்ப்பு வகையிலும் சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் அவருடனான தேநீர் சந்திப்பை புறக்கணித்தோம். மேலும், இதுகுறித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளோம்.
ஆளுநருக்கும் எனக்கும் இடையே எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆளுநர் பழக இனிமையானவர், எங்களுக்கு உரிய மரியாதையை ஆளுநர் அளித்து வருகிறார். நாங்களும் அதற்கு உரிய மரியாதையை அளித்து வருகிறோம். அரசியல் கடந்து பண்பாட்டை பாதுகாப்போம்.