சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான, திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம், சடையங்குப்பம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், சென்னை மியாட் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் 16 நாட்களாக கரோனா தொற்றுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்தது. இவர் ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டங்களை சிரத்தையுடன் முன்னெடுத்து வழிநடத்தியவர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இரங்கல்
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் பெற்றிட அயராது பாடுபட்டவர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்தபோது, இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக நிதியினை திரட்டி முதலமைச்சரிடம் வழங்கிட சிரத்தையுடன் செயல்பட்டவர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்காக தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர். அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அளவில்லாத பற்று கொண்டு மாணவர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
கரோனா தொற்றின் முதல் அலையின்போது, தன்னுடைய பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கடைசிவரை சமூகத்திற்கும், சங்கத்திற்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளவராக இருந்தார் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.