புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.26) தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரி மாநில வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூ. 9 ஆயிரத்து 924 கோடியே 41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து முதலமைச்சர் ரங்கசாமி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 6 ஆயிரத்து 190 கோடி ஆகும். மாநில பேரிடர் நிவாரணம் ரூ.5 கோடியையும் சேர்த்து, ஒன்றிய அரசின் நிதி உதவி ஆயிரத்து 729 கோடியே 77 லட்சம் ரூபாயாக இருக்கும்.
வெளிச்சந்தையில் நிதி திரட்ட அனுமதி
நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, ஆயிரத்து 684 கோடியே 41 லட்சத்தை வெளிச்சந்தையில் திரட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி அரசின் நிதி ஆதாரங்களில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய செலவினங்களுக்காக செலவிடப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்களுக்கு நடப்பாண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 10 விழுக்காடு நிதி உயர்த்தி வழங்கப்படும். மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக 2021 மசோதா அறிமுகம் செய்யப்படும்.