சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அடுத்த முறை இந்த புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, தமிழ்நாட்டில் தொழில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு அனைத்துத் துறைகளுமே முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க்கொண்டு இருக்கின்றன.
அதில் சிறு குறு, நடுத்தரத் தொழிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. அதேபோல் அண்மையில் 'ஸ்டார்ட் அப் இந்தியா' வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக 'லீடர்' அங்கீகாரத்தை தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
சென்னை நந்தனத்தில் புத்தொழில் மையம் மூன்று மாதத்தில் செயல்படத் தொடங்கும். புதிய 'புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை' விரைவில் வெளியிடப்படும். 2030ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் கனவுடன் பயணிக்கும் நமக்கு, இவை அனைத்தும் உதவிகரமாக அமையப் போகின்றன. முற்போக்கான திட்டங்கள், தேவையான நிதி ஆதாரங்கள், துறைகள் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய நான்கும் இணையும்போதுதான் மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். இதில் ஒன்று பலவீனம் அடைந்தாலும், முழுப்பலனை பெற முடியாது. அந்த வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். புத்தொழில் நிறுவனங்களுக்கு மனித வளத்தை உருவாக்க, 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் கைகொடுக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: “எதிலும் தனி பாணி - அதுதான் பார்த்திபன்” - இரவின் நிழல் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து