சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி, தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் 265 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் கட்டப்படும் இந்த மருத்துவமனை குறித்த அறிவிப்பை மார்ச் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.
தேனி கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்! - Theni Veterinary College Foundation Day Ceremony
சென்னை: தேனி மாவட்டத்தில் சுமார் 265 கோடி ரூபாய் மதீப்பிட்டில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
![தேனி கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்! CM Palaniswami lays foundation stone for Theni Veterinary College](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:01:30:1607592690-tn-che-03-cminaugration-7209106-10122020144006-1012f-1607591406-277.jpg)
அதன்படி, 253.64 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவக் கல்லூரி மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும். இக்கல்லூரி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், பால், இறைச்சி, கால்நடை உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். இந்த (2020-21) கல்வியாண்டில் இக்கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 40 மாணாக்கர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
மேலும், நவீன வகுப்பறைகளுடன் கூடிய எட்டு கல்வித் தொகுதி கட்டடங்கள், தனித்தனி விடுதிகள், கல்லூரி முதல்வர், விடுதி கண்காணிப்பாளருக்கான குடியிருப்புகள், நவீன ஆய்வக வசதிகளுடன் கூடிய பால், இறைச்சிகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உள்பட 15 துறைகள், கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை வளாகம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கோபால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.