தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் - கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொல்லியல் துறை சார்பில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்ட 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

CM Palanisamy unveiled the protected monuments
CM Palanisamy unveiled the protected monuments

By

Published : Jan 10, 2021, 4:41 AM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட, திருமலை நாயக்கர் அரண்மனை, மருதுபாண்டியர் கோட்டை, தியாகதுருகம் மலைக்கோட்டை, உதயகிரிக் கோட்டை, சின்னையன்குளம், பூண்டி அருகர்கோயில், தடாகபுரீஸ்வரர் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆகிய 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம், திருமலை நாயக்கர் அரண்மனையில், 3 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரண்மனையின் மேற்கூரையில் பழைய தளஓடுகள் மாற்றப்பட்டு, சுண்ணாம்பு கலவையில் புதிய தளஓடுகள் பாவுதல், தூண்களில் சிதிலமடைந்த பகுதிகளைச் சீர் செய்து, மேல் பூச்சு கொடுத்தல், திறந்தவெளிப் பகுதியில் புறா தடுப்பு வலை அமைத்தல், பழுதான மர ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சீர் செய்தல், அரண்மனையைச் சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதியை மேம்பாடு செய்தல், அரண்மனையில் குவி மாடங்கள் மற்றும் அரண்மனைச் சுவர் பகுதிகளில் வண்ணப்பூச்சு பூசுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் கோட்டையில் 60 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிதிலமடைந்த கோட்டைச் சுவர் மற்றும் கூரை ஆகியவை சீரமைக்கப்பட்டு, பாதுகாவலர் அறை, மின்விளக்குகள், கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலைக்கோட்டையில் 2 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கோட்டை அமைந்துள்ள மலையைச் சுற்றிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்து, பாதுகாவலர் அறை, கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோட்டைக்கு செல்லும் வழிப்பாதையில் தளம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்டம், உதயகிரி கோட்டையில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த கோட்டைச் சுவர்ப் பகுதிகள் சீர் செய்யப்பட்டும், கோட்டைச் சுவரில் மேல்பகுதி வண்ணப்பூச்சு பூசுதல், இங்குள்ள டிலெனாய் கல்லறை பகுதி மேம்பாடு பணிகள் மற்றும் செல்லும் வழிப்பாதையில் கற்தளம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னையன்குளத்தில் 15 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, கழிப்பறை மேம்பாடு வசதி, மின்விளக்குகள் போன்ற பணிகளும், பூண்டி அருகர் கோயிலில் 33 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, மின்விளக்குகள், கோயிலைச் சுற்றிலும் கற்தளம் அமைத்தல், வழிப்பாதையில் அணுகுசாலை அமைத்தல் போன்ற பணிகளும், தடாகபுரீஸ்வரர் கோயிலில் 1 கோடியே 85 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, பார்வையாளர்களுக்கு தங்கும் அறை மற்றும் கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோயிலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல் போன்ற பணிகளும், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் 1 கோடியே 99 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, பார்வையாளர்களுக்கு தங்கும் அறை மற்றும் கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோயில் வளாகத்தில் தரைத்தளம் அமைத்தல், கோயிலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல் போன்ற பணிகளும் என மொத்தம் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்' - அதிமுக பொதுக்குழுக் கூட்டம் புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details