கோவா மாநில முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டதால் அவர் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மேலும் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “மனோகர் பாரிக்கர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்தவர்.
பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். அவரது இழப்பு கோவா மாநிலத்துக்கு பேரிழப்பு. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாஜகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறப்பட்டிருக்கிறது.