‘மாணவர்களின் தோழனாக இருங்கள்’ - ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
விழுப்புரம்: ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு தோழனாக, வழிகாட்டியாக, இருந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் விழுப்புரம் நகராட்சி துவங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சட்டக்கல்லூரி, மகளிர் கலை கல்லூரிகளை திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களாட்சியை தாங்கிபிடிக்கும் தூண்களில் நீதித்துறையும் ஒன்று. நாடு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் திகழ்வதில் நீதித்துறையின் பங்கு மகத்தானது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 'நீதிக்குப் பின் பாசம்', 'நீதிக்கு தலைவணங்கு' என நீதித்துறைக்கு பெருமை சேர்க்கும் பெயர்களைதான் நடித்த திரைப்படங்களுக்கு வைத்து தர்மத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பறைசாற்றினார் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து, 2011ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டில் ஏழு சட்டக்கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 14ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதிமுக அரசு சட்டக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்த அவர், ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு தோழனாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக இருந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்றார்.