இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜூன் 3ஆம் தேதி, நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்.
இந்நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்குச் சிறந்த நாள். அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள். அந்த மாபெரும் தலைவர் இன்று நம்முடன் இல்லை என்கிற ஏக்கம் ஒருபுறமிருந்தாலும், அவர் கட்டிக் காத்த இந்த இயக்கம், இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பினை பெற்றிருக்கிறது.
5 முறை, மொத்தம் 19 ஆண்டுகள் தமிழ்நாட்டின் தகுதிமிக்க முதலமைச்சராக இருந்து ஒவ்வொரு முறையும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழையும், உயிருக்கு இணையான தமிழர்களையும் உயர்த்திய தலைவருக்கு 6ஆவது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு அமையாமல் போனாலும் 6ஆவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.
இருண்ட காலத்தை விரட்டியடித்து, சூரியன் உதித்திருப்பதால் நாளைய பொழுதுகள் எல்லாம் நல்லதாகவே விடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதை உணர்ந்தும் வகையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றேன்.
நம் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருப்பவருமான தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் இருக்கத்தானே செய்யும். கடந்தாண்டும் கரோனா கால ஊரடங்கு காரணமாகத் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை எளிய முறையில்தான் கொண்டாடினோம்.