திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட காலம் (50 ஆண்டுகள்) தலைவராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்தப் பிறந்தநாளை திமுகவினர் வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.
இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு, உள்ளிட்டோர் சென்று அங்குள்ள கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் - ஸ்டாலின் உருக்கம்
அப்போது இரண்டு நிமிடம் அனைவரும் அமைதியாக நிற்க காலையில் மு.க. ஸ்டாலின் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த ஆடியோவில், "உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலை நிமிர்ந்து வருகிறேன் வெற்றியோடு சந்திக்கவருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே" என தனது தந்தையின் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமாகப் பேசியிருந்தார்.
கருணாநிதி நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மரியாதை கருணாநிதியின் புகைப்படத்திற்கு முன்பு, 'போராளியின் வழியில் தொடரும் வெற்றிப் பயணம்' என எழுதப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக அண்ணா நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மெரினாவில் மரக்கன்று நடுவதன் மூலம் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் வனத் துறை சார்பில் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இவர்களைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனியாகச் சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, அவரது குடும்பத்தினர், கருணாநிதியின் மகள் செல்வி அவரின் குடும்பத்தினரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மரியாதை தொடர்ந்து முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் 14 மளிகைப் பொருள்கள் வழங்கல், கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கல் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.