சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூலை 26) போக்குவரத்துத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், 'போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள், போக்குவரத்துக் கழகங்களின் சேவைகள், அரசுப் பேருந்துகள் பராமரிப்பு, பேருந்து சேவை வசதி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உடன் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் பயிற்சி மையங்கள், பல்லவன் போக்குவரத்து பணிக்குழு, தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
பேருந்து சேவையை மேம்படுத்த வேண்டும்
அதேபோல, பொது பேருந்து போக்குவரத்து அமைப்பு, புதிய பேருந்து சேவைகள், கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை, புதிய திட்டங்கள், இணையதள சேவைகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், அரசுப் பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்தி, வழித்தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ஏற்றவாறு சேவையை மேம்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன் ரயில்வே திட்டங்கள், விமான நிலைய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த மாற்று எரிசக்தி பயன்படுத்தி பேருந்துகளை இயக்குதல், குறித்தும், எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்து கழகங்களுக்கு அருகாமையில் எரிபொருள் விற்பனை மையங்கள் அமைத்தல், போக்குவரத்துக் கழக கட்டடங்களின் சூரிய மின் தகடுகள் அமைத்தல் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இதையும் படிங்க:'ஆம்புலன்ஸாக மாற்றப்படுமா பேருந்துகள்?' - அமைச்சர் சொன்ன பதில் தெரியுமா?