தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 24) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கருணை ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைத்தார்.
திட்டத்தைத் தொடங்கிவைக்கும் பொருட்டு, ஓய்வுபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்கள் ஒன்பதுபேருக்கு ஓய்வூதிய அட்டைகளை (PACCS EPS CARD) வழங்கினார்.
உழவர்களுக்குத் தேவையான குறுகிய காலப் பயிர்கடன், முதலீட்டுக் கடன், வேளாண் தொழிலுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருள்களை வழங்கிவருவதோடு, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முக்கியப் பங்காற்றிவருகின்றன.
உழவர்களின் முதுகெலும்பாகச் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பித்த பெருமை தமிழ்நாட்டையே சாரும். தற்போது 4,449 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகின்றன. இச்சங்கங்களில் மொத்தம் 25 ஆயிரத்து 546 பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.